search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்குகள் அட்டகாசம்"

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் குரங்குகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அவினாசி:

    அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சரவணகுமார் என்பவரது வீட்டிற்குள் 2 குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து பெண்கள் ஒடிச் சென்று பார்த்த போது அங்கு 2 குரங்குகள் இருந்தன. குரங்குகளை விரட்ட முயன்ற போது முறைத்த படி அவர்கள் மீது பாய முயற்சித்தது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி விட்டனர். அந்தக் குரங்குகள் வீட்டில் இருந்த மாம்பழம் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது பொதுமக்கள் அவைகளை விரட்டி அடித்தனர். 

    இதையடுத்து அந்த குரங்குகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் பின்னால் சென்று அவர்கள் கையில் வைத்திருந்த பையை பிடுங்கியது. இதனால் அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் குரங்குகளை விரட்டிய பின்னர் அந்த குரங்குகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆட்டையாம்பாளையம் பகுதியில் 2 குரங்குகள் வீடுகளில் புகுந்து பாத்திரங்கள மற்றும் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் வந்து குரங்குகளை பிடித்து காட்டில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருந்துறைபட்டில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே பெருந்துறைபட்டு உள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, கோவில் தெரு, பள்ளிக்கூடத் தெரு மற்றும் ஆலய வீதி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து 100க்கணக்கான குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தது.

    இந்த குரங்குகள் வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கேபிள் வயர்கள், வீட்டிற்கு வரும் மின் வயர்களை சேதப்படுத்தியும் வருகின்றது.

    அப்பகுதியில் செல்பவர்களை குரங்குகள் துரத்தி துரத்தி கடிக்கிறது. மேலும் பள்ளி நேரங்களில் குரங்குகள் பள்ளி வளாகத்திற்குள் சென்று அசுத்தம் செய்கிறது. பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பிடுங்கி செல்கிறது.

    இதனால் மாணவர்கள் அன்றாடம் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக வனத்துறையினர் குரங்குளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை அருகே குரங்குகளின் அட்ட காசத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே கீழவஸ்தாசாவடி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கு வசித்து வந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து அட்டகாசம் செய்துவருகின்றன.

    அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை  பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டுவரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கிசெல்கின்றன.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை என்ன செய்வது என புரியாமல் புலம்பி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் குரங்களை பிடித்து வனத்துறை பகுதியில் விடவில்லை என்றால் அடுத்த கட்டமாக அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    அரூர் நகரில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அரூர்:

    அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது.

    வீட்டுக்குள் வரும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்ட சென்று விடுகிறது. குழந்தைகளையும் குரங்குகள் கடித்துள்ளது. மேலும், கேபிள் லைன், தொலைபேசி வயர்களையும் துண்டித்து விடுகிறது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வருகிறது. கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து உள்ளே நுழைந்து விடும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும், கடைகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களை பாக்கெட்டுடன் அப்படியே தூக்கி சென்று விடுகிறது. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே, குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    தருமபுரி அருகே குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்பட்டு கொண்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அடுத்துள்ள வள்ளுவர் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது இங்கு குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாத அளவு உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொதுமக்கள் வெளியே எந்த பொருளையும் எடுத்து செல்ல முடியாத அளவு குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயந்த நிலையிலேயே வெளியே வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வெளியிலேயே பொருட்களை கொண்டு செல்லும் பொழுது குரங்குகள் கையிலிருந்து பொருட்களை பறித்துச் செல்கின்றன. அப்படி தர மறுத்தால் குரங்குகள் மனிதர்கள் மீது ஏறி விழுந்து காயப்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்பட்டு கொண்டு வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை நிலவுகிறது.

    மேலும் இங்கு உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை தார் சாலையாக இல்லாமல் ஜல்லிகள் கொட்டிக்கிடக்கும் சாலையாக உள்ளது. மேலும் இவற்றால் வாகனங்கள் பழுது ஆவதுடன் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
    இதன் தொடர்ச்சியாக பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்குள் நகராட்சி நிர்வாகம் இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். மழை நேரங்களில் இந்த சாலை நீர்த்தேக்கத் தொட்டியாகவும் செயல்படுகின்ற அவலநிலை உள்ளது.

    எனவே இத்தகைய சூழ்நிலையில் இருந்து வள்ளுவர் நகர் பொதுமக்களை காப்பாற்ற நகராட்சி நிர்வாகமும் வனத்துறையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சென்னிமலை பகுதியில் குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குகள் தற்போது நகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் புகுந்து தொந்தரவு செய்வது அதிகரித்து விட்டது.

    குரங்குகளுக்குள் ஏற்படும் சண்டை மக்களை பய முறுத்துகிறது. சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குள் அங்கு உணவு பற்றாக்குறையால் சென்னிமலை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டன. வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களை குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையில் இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நடவடிக்கையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் இதுவரை குரங்குளின் தொந்தரவு கொஞ்சம் குறைந்திருந்தது.

    தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. குரங்குகளுக்கு மலை பகுதியில் போதுமான உணவு இல்லாத காரணத்தால் மெதுவாக மலை அடிவாரப் பகுதிக்கு வந்து இரை தேடுகின்றன. தற்போது சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளிகளாக இந்த குரங்குகள் வந்து இருப்பவற்றை தூக்கிப் போவது வாடிக்கையாகி விட்டது.

    வீடுகளில் ஜன்னல் திறந்து இருந்தால் போதும் அந்த வீட்டில் எந்த பொருளும் மிஞ்சாது. குறைந்தது 10 முதல் 15 குரங்குகள் வரிசையாக இறங்கிவிடும். வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும் வெயிலில் காய வைத்தால் குரங்குகளுக்குதான் ஆகும் என்ற நிலை உள்ளது. சென்னிமலை டவுன் பகுதி மக்கள் குரங்கு கூட்டத்திற்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை வீதியில் பழம், பன் போன்றவற்றை எந்த பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வந்து தூக்கி செல்கின்றன என கடை வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இந்த குரங்கு கூட்டத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×